செப்டம்பர் 28-ல் கோயம்பேடு மார்கெட் திறப்பு -ஓபிஎஸ் தகவல்
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கோயம்பேடு காய்கறி சந்தை அடுத்த மாதம் 28ம் தேதி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த மே முதல் வாரத்தில் இருந்து கோயம்பேடு மொத்த வணிக வளாகம் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உயர் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதில் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஒவ்வொரு கட்டமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உணவு தானிய மொத்த அங்காடி அடுத்த மாதம் 18ம் தேதியும், காய்கறி சந்தை அடுத்த மாதம் 28ம் தேதியும் திறக்கப்படுகிறது.
கனரக சரக்கு வாகனங்கள் தினமும் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே கோயம்பேடு சந்தைக்குள் அனுமதிக்கப்படும். சில்லறை விற்பனைக்காக கொள்முதல் செய்ய வரும் இலகு ரக வாகனங்கள் அதிகாலை முதல் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். தனிநபர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. பயணிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்லவும் அனுமதி கிடையாது. வாரத்தில் ஒருநாள் கடைகளுக்கு விடுமுறை விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.