மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு புகார்!!!
தமிழகம் முழுவதுமிருந்து 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என 2018ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டது. பெறப்பட்ட 2127 விண்ணப்பங்களில் 279 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தது. ஆனால், தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர், அதில் தகுதியடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் முரண்பாடான தகவல்களை டி.என்.பி.எஸ்.சி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி மொத்தம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1289 என தெரிவித்தது. இந்த எண்ணிக்கையின் படி, தேர்வை எழுதியதில் 64 பேர் யார் என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது என்கிறார் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் காசிமாயன்.
இன்னோர் அதிர்ச்சி என்னவென்றால், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் தேர்வு பட்டியலில் இடம்பெறச் செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது. பயிற்சி அடிப்படையில் ஆள்தேர்வு இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூறியுள்ள நிலையில், 8 பேர் பயிற்சி அடைப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி 15லிருந்து 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஆட்கள் தேர்வில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டது.