பாஜக அ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது – எல்.முருகன் உறுதி
கந்தசஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டம் மற்றும் அதன் பின் உள்ள அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் வேல் பூஜை நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தமது இல்லத்தில் வேல் பூஜை நடத்தி, கந்த சஷ்டி கவசத்தை பாடிய பின், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் முருகன், கந்த சஷ்டி கவத்தைக் கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டத்தின் சில நிர்வாகிகள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதற்கு பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் திமுகவுக்கு உள்ள தொடர்பு குறித்து முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கறுப்பர் கூட்டம் வீடியோ வெளியிட்ட விவகாரத்தை இதுவரை கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இவ்விவகாரம் மீது தனது நிலைப்பாடு என்ன என்பதை உடனடியாக விளக்க வேண்டும் என்றும் முருகன் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, தாமாக முன்வந்து பலர் பாரதிய ஜனதாவில் இணைந்து வருவதாகக் கூறிய முருகன், மேலும் பலர் பாஜகவுக்கு வருவார்கள் என்றும், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாரதிய ஜனதாவில் இணைந்து குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது என்ற கேள்விக்கு .அவர் கட்சியில் இணைந்ததாக சொன்னார்கள் விசாரித்து தான் சொல்லவேண்டும் என்றும் முருகன் தெரிவித்தார். இறுதியாக பேசிய முருகன், அதிமுக உடனான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்வதாகவும், 2021 சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.