சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை துவக்கி வைத்தார். இதன் மூலம் இன்று வரை 20,000 பேர் பயனடைந்துள்ளனர். ஆனால், கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் அதிகரித்துள்ளதால், கடந்த 4 மாதங்களாக மையம் இயங்கவில்லை. மீண்டும் ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி முதல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று துவங்கப்பட்டுள்ளது.
தினமும் சராசரியாக 50 முதல் 60 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது 10 முதல் 15 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. முன்பதிவு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது. அம்மா Gold, Diamond, platinum என 3 நிலைகளாக பரிசோதனை செய்யப்படும். அதில், அம்மா Gold என்ற பரிசோதனையில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இரத்த கொழுப்பு பரிசோதனைகள், கல்லீரல் இரத்த பரிசோதனை, இருதய சுருள் படம், கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய 1000 ரூபாயும், அம்மா டைமன்ட் என்ற முறையில் எதிரொலி இதய துடிப்பு அளவீடு, புரோஸ்டேட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாய் செலவில் செய்யப்படுகிறது.
மேலும், அம்மா பிளாட்டினம் பரிசோதனையில், அம்மா டைமன்ட் பரிசோதனைகள் உட்பட, மார்பக சிகிச்சை பரிசோதனை, டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதிதன்மை ஆகிய பரிசோதனைகளை 3000 செலவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.