“குழந்தை பிறந்த பின்பும் நிதித் தொகை வரவில்லை” – திருமணமான பெண்களின் குற்றச்சாட்டு
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் 1989ம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 5,000 ரூபாயாக இருந்த உதவித் தொகை, படிப்படியாக உயர்த்தப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 25,000 பணமும், 8 கிராம் தங்கமும், பட்டதாரிகளுக்கு 8 கிராம் தங்கத்துடன் 50,000 பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக கடந்த 2018ல் விண்ணப்பித்த பலருக்கு இன்னும் உதவி தொகை வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் அந்தந்த தாலுகா அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. திருமணத்திற்கு முன் விண்ணப்பித்து சிலருக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனாலும் இன்னும் உதவித்தொகை வந்து சேரவில்லை. உதவித்தொகை வந்துவிடும் என்ற எண்ணத்தில் பெண்ணின் பெற்றோர் கடனுக்கு வாங்கி திருமணத்தை முடித்த நிலையில், இன்னும் அதற்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கும் அவலமும் தொடர்கிறது.