இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும் செல்லும்போதும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும். தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம். மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (Bar), பெரிய அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள். அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து ஆகியவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும். மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.