இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும் வெஸ்ட் இண்டீஸ்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் 3-வது போட்டி ஸ்டிரெட்போர்ட் மைதாதனத்தில் வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்சில் இங்கிலாந்து 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிக்கொடுத்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிராட் 6 விக்கெட்களை சாய்த்தார்.
இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை சிதறடித்தது. அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டது. இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜான் காம்ப்பெல் ரன் ஏதும் எடுக்காமாலும், கேமர் ரோச் 4 ரன்னிலும் அவுட்டாகினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் 2 விக்கெட்களையும் பிராட் வீழ்த்தினார். இறுதியில் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி டெஸ்டில் மீதம் 2 நாட்கள் உள்ள நிலையில் இங்கிலாந்தின் வேகத்தை வெஸ்ட் இண்டீஸ் தாக்குபிடிக்குமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.