2021 தேர்தலுக்கு தயாராகும் அதிமுக!!! கட்சிப்பொறுப்புக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள்…!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக-வில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம், நிர்வாகிகள் மாற்றம் அடிக்கடி நடப்பது வழக்கம். அப்படி, 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற, தோல்விக்கு காரணமான முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படாத நிலையில், தற்போது அவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் அமைப்பு ரீதியாக இருந்த 56 மாவட்டங்கள் 67ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரிக்கப்பட்டுள்ள புதிய மாவட்டங்களுக்கு ஏற்ப மாவட்டச் செயலாளர்களை நியமித்தும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் எனவும் தற்பொழுது புதிதாக பதினோரு அமைப்பு ரீதியான மாவட்டங்களை உருவாக்கியுள்ளது அதிமுக தலைமை. சென்னையில் அமைப்பு ரீதியாக ஏற்கெனவே 5 மாவட்டங்கள் இருந்த நிலையில், தற்போது புதிதாக சென்னை புறநகர் மாவட்டத்தையும் அதிமுக உருவாக்கியுள்ளது. மேலும் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரிக்கவும் அதிமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் ஊராட்சி செயலர் பதவியை ரத்து செய்ததோடு, தகவல் தொழில்நுட்ப அணியையும் 5 மண்டலங்களாக கட்சித் தலைமை பிரித்தது. அந்த வரிசையில், 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தற்போது மாவட்ட பொறுப்புகளுக்கும் மூத்த நிர்வாகிகளை களமிறக்கியுள்ளது அதிமுக.
கட்சியில் நிகழும் இந்த அதிரடி மாற்றங்கள் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருவதை காட்டுவதாக கூறும் பத்திரிகையாளர்கள், அனைத்து அணியினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக தற்போதலிருந்து தயாராகவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.