தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜக பங்கேற்கும் கூட்டணி அரசு ஆட்சியமைக்கும் என அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என தெரிவித்த கருத்து அதிர்வுகளை ஏற்படுத்தியது. சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்தை ஆமோதித்த பாஜக தலைவர் முருகன், அதிமுக வெற்றி பெறாது எனில், ரஜினி மாற்றாக இருப்பாரா என்ற கேள்விக்கு, ஆம் என்று பதில் அளித்தார். தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கியைக்கொண்டுள்ள கட்சி அதிமுக என்று கூறும் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மீண்டும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்கிறார்.2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பாஜக தற்போதே செயல்படத் தொடங்கி விட்டதாகக் கூறும் அரசியல் விமர்சகர் ரவீந்தரன் துரைசாமி, அதிமுகவிற்கு மாற்றாக தமிழகத்தில் ஒரு தலைமையை உருவாக்க பாஜக விரும்புவதையே இது காட்டுவதாகத் தெரிவித்தார். கூட்டணியில் இருந்தாலும் பரஸ்பரம் தேசியக்கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் விமர்சிப்பது தொடர்ந்து நிகழ்வதுதான் என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன், இவை மட்டுமே கூட்டணி மாற்றத்திற்கான அறிகுறிகள் அல்ல என்கிறார்.
ரஜினி முதலமைச்சர் ஆனால் மட்டுமே தமிழகம் உருப்படும் என துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், பாஜக விற்குள் இருந்து அதிமுக வின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் கூடுதல் கவனத்தைப்பெறுகின்றன. இவை அனைத்தையும் தொடர்பு படுத்திப் பார்க்கும் அரசியல் நோக்கர்கள், தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டதையே இது காட்டுவதாகக் கூறுகின்றனர்.