’டான்’ விகாஸ் துபே உடன் நிக்குறது யாரு தெரியுதா? ஷாக்கான காவல்துறை!!!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8 போலீசாரை கொலை செய்த வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர் விகாஸ் துபே உஜ்ஜைனியில் பிடிபட்டார். பின்னர் கான்பூர் அழைத்து வரும் வழியில் தப்பிச் செல்ல முயன்றதாக கூறி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இவர் உயிரிழந்தாலும் சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இவருடன் தொடர்புடையவர்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கான்பூர் போலீசாரில் சிலருக்கு விகாஸ் துபே உடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் காவல் ஆய்வாளர் கே.கே ஷர்மா மற்றும் விகாஸ் துபே உள்ளிட்டோர் கேங்ஸ்டர் அமர் துபேவின் திருமணத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
சவுபேபூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக நியமிக்கப்பட்டவர் ஷர்மா. பிக்ரு கிராமத்தில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஷர்மா மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் விகாஸ் துபே உடன் இவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் தான் கான்பூரில் இருந்து போலீஸ் படையானது விகாஸ் துபே வீட்டிற்கு வருவதை முன்கூட்டியே தெரியப்படுத்தியுள்ளார். இதனால் போலீசாரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த கேங்ஸ்டர் குழுவினர் திட்டம் தீட்டியுள்ளனர். கே.கே ஷர்மாவிற்கு விகாஸ் துபேவிற்கும் இடையிலான தொடர்பு வெளிப்படையாக தெரியாமல் ஆதாரங்கள் சிக்காத நிலை இருந்தது. இந்நிலையில் திருமண வீடியோ வெளியாகி உண்மை வெட்டவெளிச்சமாகி உள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி விகாஸ் துபேவின் கூட்டாளியும், உறவினருமான அமர் துபேவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் தான் ஷர்மா கலந்து கொண்டுள்ளார். பிக்ரு கிராமத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 20 பேரில் அமர் துபேவும் ஒருவர். விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அமர் துபே போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் 29 வினாடிகள் ஓடும் வீடியோ வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத போலீசார் ஒருவர் கூறுகையில், விகாஸ் துபேவின் உதவியால் தான் தனது கிராமத்திற்கு அருகிலேயே ஷர்மாவிற்கு பணி நியமனம் கிடைத்தது. அமர் துபேவின் திருமண நாளன்று நள்ளிரவு வரை அவர் அங்கே தான் இருந்ததாக கூறியுள்ளார். இந்த ஆதாரங்கள் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கான்பூர் ஐ.ஜி மோகித் அகர்வால் தெரிவித்துள்ளார். துபேவின் தொடர்புடைய அனைவரையும் கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.