கங்குலி ஸ்டார்ட் செய்தார்; தோனி சிறப்பாக பினிஷ் செய்தார்: சங்கரகரா ஸ்பீச்!
இம்மாத தொடக்கத்தில் தோனியும், கங்குலியும் அடுத்தடுத்து பிறந்த நாள் கொண்டாடினார்கள். இதையொட்டி , சங்கரகரா, கௌதம் கம்பீர் போன்ற நட்சத்திர வீரர்களை வைத்து, தோனி மற்றும் கங்குலியின் தலைமைப் பண்பு பற்றிய விவாத நிகழ்ச்சி ஒன்றைத் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தியது. தோனி தலைமையிலான இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையும், 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையும், 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் வென்று சதானை படைத்தது. இச்சாதனைகளுக்கு எல்லாம் அச்சாணியாக இருந்து, இந்திய அணியை வளர்த்தெடுத்தது கங்குலிதான் என்று பலர் கூறிவருகிறார்கள். இது தொடர்பாக நடந்த விவாத நிகழ்ச்சியில் சில நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு பேசினர்.
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் கூறியபோது, “கங்குலியின் கேப்டன்ஸியை விட தோனியின் கேப்டன்ஸி தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நடுவரிசையில் ஆடினால் மட்டுமே, அணியை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்லமுடியும், அதை கேப்டனாக தோனி பூர்த்தி செய்துள்ளார். இக்கட்டான நிலைகளிலும் அமைதியை இருந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறார். இரண்டு கேப்டன்களிலும் எப்படிப் பார்த்தாலும் தோனி தான் சிறந்தவராக இருக்கிறார்” என்று கூறினார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கரகரா பேசியபோது, “இந்திய அணி இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு முதன்மையான காரணம் குங்குலி தான். தோனி தலைசிறந்த கேப்டன் தான். இந்திய அணி கோப்பைகளை குவிக்க காரணம் அவர்தான். ஆனால், இதற்கெல்லாம் விதையாக இருந்தவர் கங்குலி தான் என்பது என்னுடைய கருத்து” என்று தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பிர் கூறுகையில், “தோனி மற்றும் கங்குலி இருவரும் இந்திய அணியின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றினர். ஆனால், நான் தோனி பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். ஏனென்றால், இந்திய அணி முழுமையான வளர்ச்சி பெற தோனி கடினமாக உழைத்தார்” எனக் கூறினார்.
நிகழ்ச்சியின் கடைசிப் பகுதியில் பேசிய சங்கரகரா, “கடைசி வரைப் போராடி அணியை வெற்றிப் பாதைக்குக் கூட்டிச் செல்வது கடினமான ஒன்று. அதைச் செய்வதற்குக் கடுமையான போராட்ட குணம் வேண்டும். ஒருநாள் போட்டிகளுக்குத் தோனி என்றால், டெஸ்ட் போட்டிகளுக்கு கங்குலிதான்” எனத் தெரிவித்தார்.