தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் சுமலதா. இவர் தமிழில் ரஜினி நடித்த முரட்டுக்காளை, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
ஊரடங்கு நேரத்தில் தன்னுடைய தொகுதியில் பணியாற்றி வந்த சுமலதாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது.
மிகக் குறைந்த அளவே அறிகுறிகள் இருப்பதால், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். அதனால் வீட்டிலேயே தனிமைப் படுத்தி கொண்டு உரிய சிகிச்சை எடுத்து வருகிறார் சுமலதா. இதுகுறித்து அவர் செய்த பதிவில், கடவுள் அருளால் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அதனால் நான் விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன் என உறுதியாக இருக்கிறேன். நான் தொடர்பு கொண்ட நபர்கள் பற்றிய முழு விவரத்தையும் நான் அரசு அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். இருப்பினும் என்னை சந்தித்த நபர்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனே சென்று டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி கொள்வோம் என சுமலதா கூறியுள்ளார்.
சுமலதா கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சுயேட்சை பெண் வேட்பாளர் என்கிற பெருமையை பெற்றவர். கடந்த வருடம் சுமலதாவின் கணவர் கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்த நிலையில், தான் அரசியலுக்கு வந்தது முற்றிலும் ஒரு விபத்து என சுமலதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சுமலதா குணமடைவார் என அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.