குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இரு தலை வர்களும் ஆலோசனை நடத்தினர் என குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு பற்றி குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது உள்நாட்டு விவகாரம் குறித்தும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் நரேந்திர மோடி விவரித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா இடையே கடந்த 2 மாதங்களாக எல்லைப் பிரச்சினை நிலவுகிறது. நிலைமை முற்றி லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி சீன மற்றும் இந்திய வீரர்கள் மோதிக் கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
லடாக் பயணம்
இந்நிலையில் இரு தினங் களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி லடாக்கின் லே பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர் நிமு நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பிறகு காயமடைந்த வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார்.
இந்தச் சூழலில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.