தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேற்றிரவு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
அதிரடி இடமாற்றம்:
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுப் புதிய கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
“சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக இருந்த சுனில்குமார், மனித உரிமை கமிஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய டேவிட்சன் ஆசீர்வாதம், மாநில தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், ஏடிஜிபி operation – ஆக இடமாற்றப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றிய எம்.ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி operation – ஆக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு
சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராகப் பணியாற்றிய கபில்குமார் சரத்கர், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்பு டிஐஜியாக கண்ணன், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னைப் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் சரக டிஐஜியான சந்தோஷ்குமார், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இடமாறுதல் உத்தரவு
எஸ்.பிஅபிஷேக் தீட்சீத், டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா, டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சாமுண்டீஸ்வரி, பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி லட்சுமி, பதவி உயர்வு பெற்று சென்னை தெற்குப் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வாணை எஸ்.பி பாண்டியன் பதவி உயர்வு பெற்று ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதிரடி இடமாற்றம் ஏன்?
ஒரே நேரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 39 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ்குமார் அகர்வால், 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 22 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியானார். தேனி எஸ்பி, தூத்துக்குடி எஸ்பி, 2001-ல் சென்னைப் பூக்கடை துணை கமிஷனர், சென்னைப் போக்குவரத்துக் காவல் தெற்கு துணை கமிஷனராகப் பணியாற்றியுள்ளார். சிபிசிஐடி ஐஜியாகவும் மதுரை கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். இவரின் மனைவி பேராசிரியை.
மகேஷ்குமார் அகர்வால்
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரித்தபோது, “இது வழக்கமான நடைமுறைதான். பதவி உயர்வு பெற்றவர்களுக்குப் புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதனுக்கு மூன்றாண்டுகள் பணி நிறைவுபெற்றதையடுத்து அவர் இடமாற்றப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் ஏற்கெனவே பணியாற்றிவர். அதனால்தான் அவரை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்துள்ளனர்” என்றனர்.