கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் : நீதி கோரி நாளை தமிழகத்தில் முழு கடையடைப்பு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் பென்னீக்ஸ், செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு காலம் என்பதால் கடையடைப்பது தொடர்பாக கடந்த 19-ம் தேதி காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பென்னீக்ஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் போட்டு, பென்னீக்சையும் அவரது தந்தை ஜெயராஜையும் கைது செய்துள்ளார்கள். இவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் 21-ம் தேதி அடைக்கப்பட்டார்கள்.
22-ம் தேதி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார் என்று கோவில்பட்டி மருத்துவமனையில் பென்னீக்ஸ் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பென்னீக்ஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். சிறிது நேரத்தில் ஜெயராஜும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார். கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
நாளை முழு கடையடைப்பு போராட்டம்
இந்நிலையில் கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். மேலும் கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய வெள்ளையன், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
இதனிடையே கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உள்துறை முதன்மைச் செயலர், சிறைத்துறை ஏடிஜிபி சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.