“இந்தியா- இலங்கை” கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: ஆகஸ்டில் நடத்த இலங்கை முயற்சி..!!
இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி அட்டவணைப்படி ஜூன் மாதம் இலங்கையில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய அணி ஜூன் மாதம் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட இலங்கைக்கு வரவேண்டும். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிசிசிஐ எங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் அட்டவணையைப் பின்பற்ற பிசிசிஐ முனைப்புடன் உள்ளது. இந்திய அரசின் அறிவுறுத்தலைப் பெற்று இத்தொடர் குறித்த முடிவை எடுக்கவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கையில் கரோனா பரவல் குறைந்துள்ளதால் அதிக வருமானம் தரும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களை ஆகஸ்ட் மாதம் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முயற்சி எடுத்து வருகிறது.