“இங்கிலாந்தில்” தஞ்சம் கோரும் தொழிலதிபர் விஜய் மல்லையா.
லண்டன்: தன்னை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், உடல்நலத்திற்கு ஆபத்து எனக்கூறி, அகதிகள் விதியை சுட்டிக்காட்டி தொழிலதிபர் விஜய் மல்லையா, மனிதாபிமான அடிப்படையில் இங்கிலாந்தில் தஞ்சம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய வங்கிகளில் ரூ.9,961 கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இவரது இந்திய சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள சூழலில் மல்லையாவை கைது செய்து அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றன. மல்லையா மீதான வழக்கு விசாரணையில் கடந்த மே 14ஆம் தேதி உத்தரவிட்ட இங்கிலாந்து நீதிமன்றம், அடுத்த 28 நாட்களுக்குள் விஜய் மல்லையா நாடு கடத்தலாம் என்று தெரிவித்தது.இதற்கிடையே, இங்கிலாந்து நீதிமன்றத்தில் மல்லையாவுக்கு எதிரான மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நாடு கடத்தப்படுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி வந்தன. தற்போது, இங்கிலாந்து அரசிடம் தஞ்சம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டின் (ECHR) 3 வது பிரிவு விதிகளின் அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் அவர் தஞ்சம் கோரியிருப்பதாக அங்குள்ள சிஎன்பிசி-டிவி 18 தகவல் வெளியிட்டு உள்ளது. அவரது மனுவில், தன்னை இந்தியாவிடம் ஒப்படைத்தால், உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மனித உரிமைக்கழகத்தின் ECHR-ன் 3வது பிரிவு என்பது சர்வதேச அகதிகள் பாதுகாப்பு தேவைப்படுபவர்களால் பயன்படுத்தப்படும் விதி என்பது குறிப்பிடத்தக்கது.