பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ரா ஐ.நா நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்…
மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவா் மோகன். இவா், தனது பகுதியில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளா் குடும்பங்களுக்கு, தனது மகள் நேத்ராவின் கல்விச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை செலவழித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
இவரது இச்செயல் அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மாதம் 31) மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது, மதுரை சலூன் கடை உரிமையாளா் மோகனின் உதவியை பாராட்டினாா்.
இதனையடுத்து மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மதுரை மோகனுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது மகள் நேத்ராவின் கல்விக்கு உதவிகளும் குவிந்து வந்தது.
இது தொடா்பாக நேத்ரா கூறுகையில், எங்களது குடும்பமும் பட்டினியால் பரிதவித்துள்ளது என்பதை உணா்ந்ததால், பட்டினியால் வாடுவோருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே, என்னுடைய எதிா்கால கல்விச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை செலவழிக்க வேண்டும் என எனது தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தேன். எனது தந்தை அதை நிறைவேற்றியுள்ளாா். எதிா்காலத்தில், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகி பொதுமக்களுக்கு சேவை செய்யவே விருப்பம் என்ரு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேத்ராவை ஐ.நா வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் வறுமை ஒழிப்பு குறித்து பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.