சென்னை: கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் பலர் வேலை இழந்த நிலையில், தங்கள் சொந்த ஊர்களில் விவசாயத்துக்கு திரும்ப ஆர்வம் காட்டி வருவது சொந்த ஊர்மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. உலகையே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரசால் பல்வேறு தீமைகளை மக்கள் சந்தித்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பலவும் மக்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கி வருகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை துவம்சம் செய்து வருகிறது. லட்சக்கணக்கான உயிரிழப்புகள் மக்களை பெரும் அச்சத்துக்குள்ளாக்கி வருகிறது. ஆரம்பக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்துதான் இந்தியாவுக்குள்ளும் கொரோனா வைரஸ் நுழைந்தது. அப்போது அதன் பாதிப்பு இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணரவில்லை. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களை தடுத்திருந்தாலோ அல்லது அப்படி வந்தவர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுத்த பின்பு அனுமதித்திருந்தாலோ கொரோனா இல்லாத நாடாக இந்தியா இருந்திருக்கும்.
ஆனால், இந்தியாவில் தாக்கம் அதிகரித்த பின்புதான் மிகவும் தாமதமாக வெளிநாட்டு விமானங்கள் தடை செய்யப்பட்டன. அதன் பாதிப்பு இன்று வரை சற்றும் குறையாமல் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் என்ற அளவில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஒட்டுமொத்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால் பலர் வேலை இழப்பால் வெளிநாடுகளில் வேலை பார்த்த தமிழகத்தை சேர்ந்த பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வந்தனர். ஆரம்பக்கட்டத்தில் வெறும் காய்ச்சல் பரிசோதனை மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால், வெளிநாடுகளில் இருந்து பலர் தமிழகத்துக்கு வேகமாக வரத் தொடங்கினர். கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு விமான போக்குவரத்தை தடை செய்யக்கூடிய காலக்கட்டத்தில் பலர் சென்னை வழியாக வந்தால் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்க வேண்டி வரும் என்பதால் பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் வழியாக வந்துவிட்டனர்.
தற்போது அவர்கள் அனைவரும் தங்களது தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பாதிப்பு இருந்தவர்களும் அதிலிருந்து விடுபட்டும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டனர். இவ்வளவு நாள் தங்கள் குடும்பங்களை மறந்து வெளிநாடுகளில் பரபரப்பாக வேலை பார்த்து வந்தவர்களுக்கு இப்போது தங்கள் சொந்த ஊர்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு மீண்டும் இயல்பு நிலை திரும்பினாலும் மீண்டும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்கிறார்கள். அந்த அளவுக்கு பல நிறுவனங்கள் கொரோனாவால் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாம்.
இந்த சூழ்நிலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கினாலும் வேலைவாய்ப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் பலர் தங்கள் சொந்த மண்ணிலே தொழில் செய்வதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதில் பலரது விருப்பம் விவசாயமாகத்தான் இருந்து வருகிறது. வேறு தொழில்களில் பணத்தை பெரிய அளவில் முதலீடாக போட்டு தலையில் கையை வைத்திருக்க பலருக்கு விருப்பமில்லை. விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் இருப்பதால் அதில் பலர் குதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் ஆடு, மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
வெளிநாட்டு வாழ்க்கை அப்படியே சில மாதங்களில் விவசாயத்துக்கு மாறியிருப்பது பலரது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்ய தொடங்கியுள்ளனர். இதுகுறித்து வெளிநாட்டில் வேலை பார்த்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய பாலா என்பவர் கூறியதாவது:அரபு நாடுகளில் வேலை பார்த்து வந்தேன். கொரோனா தாக்கத்தால் சம்பளம் இழுத்தடித்து வழங்க தொடங்கினர். உடனடியாக தமிழகம் திரும்பி விட்டேன். இப்போது அந்த கம்பெனியில் கொரோனா ஏற்பட்டு 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக சொன்னார்கள். அந்நிறுவனமும் தனது உற்பத்தியை படிப்படியாக குறைத்து வருகிறது. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர். நிலைமை சரியாக இன்னும் பல மாதங்கள் ஆகும். அப்படியே இருந்தாலும் இனி அங்கு வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்காக எவ்வளவு நாள்தான் சும்மா இருக்க முடியும். விவசாயத்தில் ஆர்வம் இருப்பதால் அதில் இறங்கி விட்டேன்.
தற்போது நாட்டு மாடு வளர்க்க முடிவு செய்துள்ளேன். முதல்கட்டமாக இரண்டு மாடுகளை வாங்கியிருக்கிறேன். இதேபோன்று ஆடுகளை வாங்கவும் முடிவு செய்துள்ளேன். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவன்.. ஆடு, மாடு மேய்க்க கிளம்பிட்டானே.. என சிலர் கிண்டல் செய்யத் தான் செய்கின்றனர். ஆனால் இந்த தொழிலை பெரிய அளவில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளேன். அதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறேன். நல்ல படியாக வந்தால் வெளிநாடு செல்வதை தவிக்கவும் முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.