கராச்சி விமான நிலையம் அருகே விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.!!
கராச்சி: பாகிஸ்தானில், கராச்சி விமான நிலையத்துக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த பெரும்பாலானோர் மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாகூரில் இருந்து கராச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எதிர்பாராத வகையில் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான விபத்து நிகழ்ந்த பகுதி அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இதனால், மீட்புப் பணிகளில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கராச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் 91 பயணிகள் உட்பட 100 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் விரைவாக தரையிறங்க வேண்டும் என்றும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விமானி, விமான நிலையத்தை ஒரு முறை சுற்றி வர முயற்சித்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுவரை விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து நான்கு உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விமானம் விழுந்ததால் காயமடைந்த குடியிருப்பு வாசிகளும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.