மஹாராஷ்டிரா மாநிலத்தில், தக்காளிப் பழத்தில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஹமதுநகர், புனே மற்றும் நாசிக் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகளை அடையாளம் தெரியாத வைரஸ் ஒன்று தாக்கியுள்ளது.இதையடுத்து, சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் விளைந்து வந்த தக்காளிச் செடிகள் அனைத்தும் கூண்டோடு அழிக்கப்பட்டன.தக்காளிகளைத் தாக்கிய அந்த வைரஸ் குறித்து வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.இந்த வைரஸால் தாக்கப்பட்ட தக்காளிகளின் நிறமும் அளவும் வித்தியாசமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், வைரஸ் தாக்கியவுடன் தக்காளிகள் யாவும் மஞ்சள் நிறத்தில் கரடுமுரடான வடிவிலும், உள்புறம் கருப்பு நிறமாகவும் ஆகின்றனவாம்!
அதைத் தொடர்ந்து அப்பழங்கள் எல்லாம் சிறிது சிறிதாக அழுகத் தொடங்கி விடுமாம்; செடிகளும் பட்டுப்போய் விடுமாம்! பின்னர், தக்காளிகளும் வெள்ளை நிறமாகி விடுமாம்!!
மஹாராஷ்டிரா விவசாயிகள் அந்த வைரஸை ‘மூவர்ண வைரஸ்’ (Tricolor virus) என்று அழைக்கின்றனர்.இந்தப் புதிய வைரஸ் தாக்குதல் காரணமாக, தக்காளிச் செடிகள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டு விட்டதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.அடுத்த ஓராண்டுக்கு அந்த நிலங்களில் தக்காளியைப் பயிரிட முடியாது என்றும் வேதனையுடன் அவர்கள் கூறினர்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக தக்காளிப் பழங்களை சரியாக விற்கமுடியாத நிலையில், இந்தப் புதிய பிரச்சனை அவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.