தகவல்கள்தமிழ்நாடு

உடல்நலம் குன்றிய தாயை கவனிக்க 120 கி.மீ. சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உடல்நலம் குன்றிய தாயை கவனிப்பதற்காக, கூலித்தொழிலாளி ஒருவர் சைக்கிளில் 120 கி.மீ. பயணித்து ஊருக்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

காரைக்குடி அருகே எஸ்.ஆர்.பட்டணத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (50). கூலித்தொழிலாளியான அவர் பிழைப்புக்காக மனைவி, மகன், மகள், தாயார் வள்ளியம்மாள் (70) ஆகியோருடன் திருச்சியில் குடியேறினார். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வள்ளியம்மாளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு, நடமாட முடியாமல் முடங்கினார்.இதையடுத்து தாயை கவனிக்கும் பொருட்டு மனைவி, குழந்தைகளை திருச்சியிலேயே விட்டுவிட்டு, சொந்த ஊரான எஸ்.ஆர்.பட்டணத்தில் தாயாருடன் மீண்டும் குடியேறினார். வருமானத்திற்காக அவர் தனியார் அச்சகத்தில் ரூ.300 தினக்கூலியில் வேலைக்கு சேர்ந்ததுடன், காலை, மாலை தாயாருக்கு பணிவிடையும் செய்து வந்துள்ளார்.

வாரத்தில் ஒரு நாள் மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக திருச்சி சென்று விட்டு வருவார். இந்நிலையில், கரோனா தொற்றால் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், திருச்சி சென்ற கருப்பையாவால் ஊருக்குத் திரும்ப முடியவில்லை.உதவிக்கு ஆள் இல்லாததால் கருப்பையாவின் தாயார் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். தாயார் படும் அவஸ்தையை அக்கம்பக்கத்தினர் மூலம் கருப்பையா தெரிந்து கொண்டார். போக்குவரத்து வசதி தொடங்காதநிலையில், மோட்டார் சைக்கிளும் இல்லாததால் தாயை கண்பதற்காக சைக்கிளிலில் 120 கி.மீ., பயணித்து ஊருக்கு வந்தார். நாற்பத்தி ஐந்து நாட்களுக்குப் பிறகு மகனை பார்த்த தாயார் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வரவேற்றார். பெற்றோரை கண்டுகொள்ளாத பிள்ளைகள் வாழும் இக்காலக்கட்டத்தில் தாயாரை கவனிப்பதற்காக சிரமப்பட்டு ஊருக்கு வந்த கூலித்தொழிலாளியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஊரடங்கு காலக்கட்டத்தில் கருப்பையா குடும்பத்திற்கு எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை என்பது தான் வேதனை.

இதுகுறித்து கருப்பையா கூறியதாது:

“கரோனாவால் எனக்கு வேலை இல்லாமல் போனது. திருச்சியில் உணவுக்காக எனது மனைவி, பிள்ளைகளுடன் சிரமப்பட்டேன். அதேசமயத்தில் இங்கு எனது தாயார் சிரமப்பட்டார். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தேன். அதிலும் எனது தாயார் உடல் நல பிரச்சினையாலும், உணவுக்காகவும் சிரமப்பட்டது மிகுந்த வேதனையை தந்தது. இதனால் அவரை கவனிக்க சைக்கிளிலேயே ஊருக்கு வந்தேன். புதுக்கோட்டை அருகே வந்தபோது சைக்கிள் டயர் பஞ்சரானது. ஆறு கி.மீ., நடந்தே சென்று ஒரு கிராமத்தில் சைக்கிளுக்கு பஞ்சர் பார்த்தேன். கடைசி காலத்தில் என்னை வளர்த்த தாயாருக்கு பணிவிடை செய்வதே எனக்கு கிடைத்த பாக்கியம்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.