டாஸ்மாக் விவகாரத்தில் கடை திறந்த இரண்டாவது நாளிலேயே மூட நீதிமன்றம் உத்தரவிட்டது தன் அரசுக்கு விழுந்த மிகப்பெரிய அடியாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக அரசின் வருவாய் முற்றிலுமாக முடங்கியுள்ளது. கொரோனா நிவாரண உதவியும் வழங்கவில்லை, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி அரசு திணறி வருகிறது.இந்த நிலையில்தான் வேறு வழியின்றி மூன்றாம் கட்ட ஊரடங்கின்போது சில தளர்வுகளை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்தும் பொருளாதார நிலையைக் கருதி வேறு வழியின்றி ஊரடங்கு தளர்வு என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அரசை நடத்த நிதி தேவைப்படுகிறது… டாஸ்மாக் திறந்தால் மட்டுமே அரசை நடத்த முடியும் என்ற நிலையில் மே 7ம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்டது. எதிர்பார்த்ததுபோலவே முதல் நாளிலேயே 170 கோடி ரூபாய் கொட்டியது. இந்த நிதியைக் கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை சரி செய்துவிடலாம் என்று நினைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்ற உத்தரவு இடியாக இறங்கியது.தமிழகத்துக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி-யில் வழங்க வேண்டிய பங்கே பல ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு தமிழக அரசு மிகக் குறைவாகவே கேட்டது. ஆனாலும் மத்திய அரசு கிள்ளித்தான் கொடுத்தது. நிவாரண நிதி வழங்காவிட்டாலும் பரவாயில்லை, தரவேண்டிய பங்கையாவது தாருங்கள் என்று கேட்டோம். அதுவும் இல்லை. தந்த நிதி வந்திருந்தால் கூட ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்காமல் இருந்திருக்கலாம். இப்போது கடையைத் திறக்க வைத்து கெட்ட பெயர் கிடைத்ததுடன், தடை விதித்து அரசுக்கு தர்மசங்கத்தையும் மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.