கோவில் திருவிழாவுக்காக வைத்திருந்த பணத்தை கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூ.1000 வீதம் அப்பகுதி மக்களுக்கு விழாக்குழுவினர் பகிர்ந்து கொடுத்தனர்.
மதுரை மாவட்டம் கருவனூர் ஊராட்சியில் உள்ளது மந்திக்குளம் கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் விவசாய வேலை மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாப்பாட்டுக்கே அவதிப்பட்டு வந்தனர். இதனை உணர்ந்த மந்திக்குளம் செல்வ விநாயகர் கோவில் விழாக்குழுவினர் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடுவதற்காக சேமிப்பில் இருந்த ரூ.1.5 லட்சத்தை ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரித்துக்கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூ.1000 வழங்கப்பட்டது.
இதுகுறித்து விழாக்குழுவினர் கூறும்போது, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கால அவகாசம் உள்ளது. தற்போது கிராம மக்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர். கோவில் திருவிழாவைவிட பசியில் உள்ள மக்களுக்கு உதவுவதுதான் சிறந்தது என்பதால் திருவிழாவுக்காக வைத்திருந்த பணத்தை பகிர்ந்து கொடுத்தோம் என்றனர்.