இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகள் வழங்கும் கடைகள் தவிர ஒரு சில கடைகளும் இன்று முதல் இயங்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில அல்லது யூனியன் பிரதேசங்களில் பதிவுபெற்ற கடைகள் இன்று முதல் திறந்து கொள்ளலாம் என்றும், ஆனால் 50% ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வாடிக்கையாளர்கள் சமூக விலகலை பின்பற்றவும், மாஸ்க் அணிந்திருக்கவும் கடைக்காரர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் செயல்படும் கடைகள் ஆகியவற்றை திறந்து கொள்ளலாம் என்றும், மேலும் சலூன்கள் திறப்பதற்கும் அனுமதி உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் கிராமங்கள் மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து சந்தைகளும் திறந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த விதிமுறை விலக்கம் என்பது ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மதுபான கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்றும், ஊரடங்கு உத்தரவும் முடியும் வரை மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் தியேட்டர்கள், ஷாப்பிங் வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவைகளுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.