பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று இப்போது வெளிவந்துள்ள ஆய்வில் மூலம் உறுதியாக தெரியவந்துள்ளது.
இதுசம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ஆர்ப்மீடியா என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழக மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வு பேராசிரியர் ஷெர்ரிமேசன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களின் 250 குடிநீர் பாட்டில்களை ஆய்வுக்கு எடுத்து அவற்றை பரிசோதித்துள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து பிஸ்லரி குடிநீர் பாட்டிலும் சோதனைக்கு எடுக்கப்பட்டது.
இந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை 1.5 மைக்ரான் அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட வடிகட்டி மூலம் வடித்தெடுத்து பின்னர் அந்த வடிகட்டியில் தேங்கியுள்ள பொருட்களை ஆய்வு செய்தார்கள். மைக்ராஸ்கோப் மற்றும் இன்ப்ரா ரெட் பரிசோதனை மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் இருந்து தெரியவந்தது.
அதாவது பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்) துகள்கள் அந்த வடிகட்டியில் தேங்கி இருந்தன. அதாவது தண்ணீருக்குள் இந்த துகள்கள் கலந்து இருந்தன.
சராசரியாக ஒரு லிட்டர் தண்ணீரில் 0.1 மில்லி மீட்டர் அளவு கொண்ட 10.4 பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருந்தன. சில பாட்டில்களில் ஒரு லிட்டர் நீரில் 10 ஆயிரம் துகள்கள் கூட கலந்திருப்பது தெரியவந்தது. ஒருசில பாட்டில்களில் மட்டுமே இந்த துகள்கள் இல்லாமல் இருந்தது. மொத்தம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 93 சதவீத பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
எனவே பாட்டில் குடிநீர் மற்றும் பிளாஸ்டிக் கேன் குடிநீர் உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஷத்தன்மை ஆய்வு பேராசிரியர் ஸ்காட்பெல்சர் கூறும்போது, பாட்டில் தண்ணீரை விட குழாயில் நேரடியாக வரும் தண்ணீர் தான் பாதுகாப்பானது. எனவே மக்கள் அவற்றுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
வேறு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் பாட்டில் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுகாதாரமற்ற தண்ணீரால் ஒவ்வொரு 90 விநாடிகளிலும் ஒரு குழந்தை நீர் தொடர்பான நோயால் இறக்கிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
எனவே இனி வெளியே செல்லும் போது பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீருக்கு பதிலாக கையோட தண்ணீர் கொண்டு செல்லுங்கள் அல்லது இளநீர் , கரும்பு ஜூஸ் போன்ற வற்றை குடியுங்கள்.
மேலும் எப்போதும் பிளாஸ்டிக் அல்லாது வேறு வகை பாட்டில் களை உபயோகப்படுத்துங்கள்.