ராமநாதபுரம் பரமக்குடி அடுத்த சாத்தனூரைச் சேர்ந்தவர் 80 வயதான நாகரத்தினம் ,பரமக்குடி ஸ்டேட் வங்கியில் முதியோர் உதவித் தொகை வாங்குவதற்காக ரயிலில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சென்றுள்ளார்.
முதுமையின் காரணமாக சரியாக பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்த நாகரத்தினம் தவறுதலாக சென்னை செல்லும் ரயிலில் ஏறி, தஞ்சையில் இறங்கியுள்ளார்.கடந்த 5 நாட்களாக வழி தெரியாமல் சுற்றி திரிந்த நிலையில், நேற்று முன்தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் பசியால் மயங்கிக் கிடந்துள்ளார் நாகரத்தினம். அவ்வழியாக சென்ற பலரும் கண்டுக்கொள்ளாதபோது ரியாசுதீன் என்ற இளைஞர் மட்டும் முதியவரின் அருகில் சென்று விசாரித்துள்ளார்.
ஆனால் முதியவருக்கு சாத்தனூர் என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் தெரியாததால், அவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து, பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் ரியாசுதீன்.சாத்தனுாரைச் சேர்ந்த இருவரின் மொபைல் எண்களை பெற்று, ‘வாட்ஸ் ஆப்’ குரூப்களுக்கு முதியவர் படத்தை பகிர்ந்துள்ளனர்.. இதை நாகரத்தினத்தின் இளையமகன் ராஜாராமன் பார்த்து, தனது அப்பா தான் அது என்று ரியாசுதீனை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
பின்னர் நேற்று அதிகாலை, ராஜாராமன் தஞ்சை வந்து, ரியாசுதீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தனது தந்தையை அழைத்து சென்றார்.அவ்வப்போது நடக்கும் இது போன்ற செயல்கள் , தமிழகத்தில் மனித நேயம் அழியாது இருப்பதை உணர்த்துகிறது.