90 கிட்ஸ்கள் விரும்பும் பாரம்பரிய மிட்டாய் கடை…
80 மற்றும் 90-களில் பிறந்தவர்கள் பாரம்பரிய தின்பண்டங்களான வெல்லம் கலந்த படிக்கல்மிட்டாய், அரிசி மாவினால் தயாரிக்கப்பட்ட பேப்பர் அப்பளம், வெடிமிட்டாய் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர். தற்போது வெளிநாட்டு சாக்லெட்டுகள் வருகையால் நமது பாரம்பரிய மிட்டாய் தயாரிப்புகள் வெகு அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. அதனை மீட்டெடுக்கும் வகையில் தேனி சமதர்புரத்தில் வள்ளி கண்ணன் என்பவர், “90 கிட்ஸ்” என்ற பெயரில் பாரம்பரிய தின்பண்ட கடை தொடங்கியுள்ளார்.டிப்ளோமோ முடித்த வள்ளி கண்ணன் முதலில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி 90 கிட்ஸ் சாப்பிட்ட மிட்டாய் கடை வைத்துள்ளார்.
அதில் தற்போதைய இளைஞர்கள் சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட கமர்கட், காசு மிட்டாய், குச்சிமிட்டாய், ஜவ்வுமிட்டாய், தேன்மிட்டாய் உள்ளிட்ட 96 வகையான மிட்டாய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இக்கடையை தேடி வரும் 90 கிட்ஸ்கள், சிறு வயதில் சாபிட்ட மிட்டாய்களை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு தங்களது குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர். இந்த மிட்டாய்கள் சாப்பிடுவதால் தனது பழைய கால நினைவுகள் ஞாபத்திற்கு வருவதாக கூறுகிறார் வசந்த். குழந்தை பருவத்தில் சுவைத்து சாப்பிட்ட தின்பண்டங்கள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது இளைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.