காஞ்சிபுரம் : மின் கம்பி அறுந்து விழுந்து மின்வாரிய ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர் என இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பருத்தி குளம் பகுதியில் வசிப்பவர் பாக்கியநாதன். இவர் வெள்ளை கேட் மின்வாரியத்தில் கம்பியாளராக பணிபுரிந்து வருகின்றார். காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் (லோ வோல்டேஜ் சப்ளை) குறைந்த மின்னழுத்தம் உள்ளதாக மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து உதவி மின் பொறியாளர் சுந்தர்ராஜ் அவர்கள் பாக்கியநாதனை ஈஞ்சம்பாக்கம் கிராமத்திற்கு சென்று பிரச்சனையை சரிப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் பாக்கியநாதன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர் தயாளன் என்பவரை அழைத்துக்கொண்டு வயல் வெளியின் நடுவே உள்ள மின் கம்பம் அருகே சென்றபோது திடீரென 11 கேவி உயர் மின்னழுத்த கம்பி அறுந்து அவர்கள் மீது விழுந்தது .
அதில் நிலைகுலைந்து போன இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தை வயல்வெளிக்கு சென்ற விவசாயிகள் பார்த்துவிட்டு உடனே காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் தாலுகா காவல் ஆய்வாளர் காவல்துறையினர் நேரில் வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள். பொதுவாக உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்பது மின்வாரிய நடைமுறை .
இவர்கள் சென்ற போது மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினாலும் பாதுகாப்பு கவசங்கள் எடுத்துச்செல்லாத காரணத்தினாலும் இவர்கள் மீது விழுந்த மின் கம்பியில் இருந்து இவர்களால் தப்பிக்க இயலவில்லை .
வையாவூர் துணை மின்நிலையத்தில் பிரேக் டவுன் வேலை செய்யும் போது மின்சார விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் காஞ்சிபுரம் துணை மின் நிலையம் மின்சார ஆப்பரேஷன் நிலையம் சரியான முறையில் இயங்காத நிலையில் இந்த மின் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் மின்சார வாரிய ஊழியர்கள் கருதுகிறார்கள்.
மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் 50 ஆண்டுகளுக்கு மேல் அந்த துணை மின் நிலையம் பல்வேறு நிலைகளில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு மறைக்கப் பட்டுள்ளது எனவும் மின்வாரிய சிஐடியூ உறுப்பினர்கள் கூறுகின்றனர்.