இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று திடீரென மாயமானது. ஜகார்த்தா கடற்கரையில் கிடைத்த சில விமானப் பொருட்களுடன் மீனவர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி பின்னர் விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து அதில் பயணம் செய்த 62 பயணிகளின் நிலை குறித்த பதட்டம் அதிகரிக்கவே, அவர்களை தேடும் பணியும் தொடங்கியது.
ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு சென்ற பயணிகள் விமானத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 62 பயணிகள் இருந்தனர். ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நேற்று மாயமானதாகக் கூறப்பட்டது. இந்த விமானம் ஜாவா கடலில் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் அங்கு தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது.
அதையடுத்து தற்போது விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அங்கு சிதைந்த மனித உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளும் தற்போது ஜாவா கடற்கரைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக இந்தோனேஷியாவின் பாதுகாப்பு அமைப்பினர் தகவல் கொடுத்து உள்ளனர். இதனால் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை கண்டுபிடித்து விடலாம் எனவும் இந்தோனேஷிய அதிகாரிகள் நம்பிக்கை அளித்து உள்ளனர். ஆனால் மாயமான பயணிகளின் நிலையை குறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.