நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கர்நாடகாவில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளிகள் திறந்த 5 நாளில் பல்வேறு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் 22 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பெலகாவி தாலுகாவிற் குட்பட்ட கடோலி கிராமத்தில் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அந்த பள்ளி மூடப்பட்டது.இதைத்தொடர்ந்து தொற்று அறிகுறி தென்படுபவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா மாவட்டத்தில் 6 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியாற்றும் 7 பள்ளிகள் 2 நாட்கள் மூடப்பட்டு அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அந்த பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
விஜயபுரா மாவட்டம் பொலேகோவன் கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர், சிக்மளூரில் 5 ஆசிரியர்கள், முடிகேரா, காடூர் மற்றும் சிக்கமகளுரில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் என 5 நாளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது ஒரு சில இடங்களில் மாணவர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாக உள்ளது.
கடந்த திங்களன்று 55 சதவீதம் பேர் மட்டுமே வந்துள்ளனர். 10-ம் வகுப்பில் 51 சதவீதம் பேர் மட்டுமே வந்துள்ளனர்.