400 கிலோ கஞ்சா பறிமுதல்… கும்பல் சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் சோதனைச் சாவடி உள்ளது. அங்கு வழக்கம்போல் திங்கட்கிழமை இரவு மாதவரம் காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே காய்கறி ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தினர். ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் இருந்த மற்றொருவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காய்கறி வேனை சோதனையிட்டனர். சோதனையில் வேனில் வெங்காய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருநதது தெரியவந்தது.
மேலே உள்ள வெங்காய மூட்டைகள் சிலவற்றை அகற்றிவிட்டு சோதித்தபோது, கீழே வேறு மூட்டைகள் இருந்துள்ளன. அதை பிரித்து பார்த்தபோது, கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை தொடரந்து அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தபோது, 14 மூட்டைகளில் 400 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த 28 வயதான விக்னேஷ் மற்றும் 31 வயதான அருண் பாண்டி என்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி வேனின் உரிமையாளரான புரசைவாக்கத்தை சேர்ந்த 49 வயதான பாபுவையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் ஒரு கும்பலுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. அவர்கள் எவ்வளவு நாட்களாக இதுபோல் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். யார் யாருக்கு கஞ்சாவை சப்ளை செய்துள்ளனர் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, அவர்கள் கடத்தி வந்த 400 கிலோ கஞ்சாவைவும், கஞ்சா கடத்த பயன்படுத்திய மினி வேனையும் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து செங்குன்றம் சோதனை சாவடி வழியாக கடந்த சில வாரங்களாக ஒரு சில கிலோக்கள் அளவில் மட்டுமே கஞ்சா கடத்தி வந்து போலீசில் சிக்கிய நிலையில், ஒரே நாளில் 400 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.