கடந்த 1985-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஒரு வயதில் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட காவன் எனப் பெயரிடப்பட்ட இந்த யானை, 24 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்தது.
பாகிஸ்தானில் இருக்கும் ஒரே ஆசிய யானை என்பதால், நீண்டகாலம் இஸ்லாமாபாத்தில் உள்ள மர்காசர் உயிரியல் பூங்காவில் மக்கள் வந்து பார்த்து செல்லும் காட்சிப்பொருளாகவே காவன் பார்க்கப்பட்டது.
காவனின் தனிமையைப் போக்குவதற்காக 2009-ஆம் ஆண்டில், சாஹேலி என்னும் பெண் யானை அதனுடன் சேர்க்கப்பட்டது. அந்த யானையும் 2012-ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் இறந்தது.
காவனின் மனநிலையும், உடல்நிலையும் மிகவும் மோசமானதை அறிந்த பாகிஸ்தான் விலங்குகள் நல அமைப்பு, அமெரிக்க பாடகரும், நடிகையுமான சேர் (Cher), சர்வதேச விலங்குகள் நல அமைப்பு ஆகியோரின் முயற்சியால், காவனின் மீதான கவனம் ஏற்பட்டது.
குறிப்பாக ஃபோர் பாஸ் இன்டர்நேஷனல் எனும் விலங்குகள் நல அமைப்பு எடுத்த மிகப்பெரிய முயற்சியால், காவனின் உடல்நிலை சீரடைந்தது. காவனை பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையும் எடுக்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக சொல்லமுடியாத துயரத்திலும், கவனிப்பின்றி, சுவற்றில் முட்டி, முட்டி தனிமையை வெளிப்படுத்தி வந்த காவன் நேற்று முன் தினம் கம்போடியாவுக்கு விமானத்தில் பறந்தது.
கம்போடியாவில் காவனுக்கு நிச்சயம் தனிமைச் சிறை இருக்கப்போவதில்லை என்பதால் விமானத்தில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
காவன் மீட்புக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்கப் பாடகி சீர், கம்போடியாவில் காவனை வரவேற்கச் சென்றிருந்தார்.
விமானத்தில் ஏற்றப்பட்ட காவனுக்கு விமானத்தில் இருக்கும் சிறு பகுதி வழியே உணவும் வழங்கப்பட்டது.
கம்போடியா சென்ற பின்னர் அங்குள்ள யானையுடன் காவன் யானை உற்சாகமாக கைகொடுத்தது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது