சுப்பிரமணியம் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவருக்கு எதிரில் நல்ல பாம்பு தோன்றி தரிசனம் கொடுப்பது வழக்கமான செயலாக மாறிவிட்டது.
ஆந்திர மாநிலத்தில் ஏழைத் கூலித் தொழிலாளி ஒருவர் 74 முறை பாம்பு கடிக்கு ஆளாகியுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் பிழைத்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணியம். இவருக்கு 5 வயதாக இருக்கும் போது, முதன்முதலாக நல்ல பாம்பு ஒன்று கடித்தது.
அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த சுப்ரமணியத்தை 32 ஆண்டுகளில் 74 முறை நல்லபாம்பு கடித்துள்ளது. இதன் காரணமாக சுப்பிரமணியம் வீட்டைவிட்டு வெளியில் வரவே அச்சம் கொண்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
சொந்த ஊரில் அச்சத்துடன் வாழ பயந்து, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். ஆனால், அங்கும் பாம்பு கடிக்கு ஆளானதால் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
கூலி வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் சுப்பிரமணியம் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவருக்கு எதிரில் நல்ல பாம்பு தோன்றி தரிசனம் கொடுப்பது வழக்கமான செயலாக மாறிவிட்டது.
இதனால் பிழைப்புக்காக வெளியூருக்கு செல்லவும் இயலாமல் சொந்த ஊரிலும் வேலை செய்ய முடியாமல் சுப்பிரமணியம் தவித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் பல்வேறு இடங்களில் ஜோசியம் பார்த்தும், குறி கேட்டு உரிய பரிகாரங்களை செய்தும் பலன் கிடைக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் மருத்துவ செலவு ஆவதால் விரக்தியடைந்த சுப்பிரமணியம் அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்ல பாம்புகள் மட்டுமே இவரைத் தொடர்ந்து கடிப்பது ஏன் என்பதும் பிரியாத புதிராக உள்ளது.