3 நாட்களுக்குள் விவசாய மின் இணைப்பை பெறலாம்…
விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் பதிவு செய்வது, மின் இணைப்பு பெறுவது மற்றும் அதனை இடமாற்றம் செய்வது உள்ளிட்டவைகளில் கடினமான நடைமுறைகள் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகளுக்கு, மின்சார இணைப்பு வழங்குவதில் தாமதம் நிலவி வந்த சூழலில், புதிய திருத்தங்களுடன் கூடிய எளிமையான வழிமுறைகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மின் இணைப்புக்கோரும் விவசாயக் கிணறு, கூட்டு உரிமையாக இருக்கும் பட்சத்தில், விண்ணப்பதாரர் பிணை முறிவு பத்திரம் அளித்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரை ஏக்கர் பாசன நிலம் இருந்தால், விண்ணப்பத்துடன் வி.ஏ.ஓ. அளிக்கும் கிணறு மற்றும் நிலத்திற்கான உரிமைச்சான்று ஒன்று மட்டும் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல ஆரம்பக்கட்டத்திலேயே மின் மோட்டாரை பொருத்தி காட்டத் தேவையில்லை எனவும், மின்மாற்றி மற்றும் மின்கம்பி பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அதற்காக 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டாரை பொருத்தி தயார் நிலையை காட்டிய 3 நாட்களுக்குள் முழுமையான மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அரை ஏக்கர் பாசன நிலம் இருந்தால், ஒரே சர்வே எண்ணில் உள்ள இரண்டு கிணறுகளுக்கும் தனித்தனி மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ஒரே கிணற்றுக்கு, கிணற்றின் உரிமைதாரர்கள் தனித்தனியாக மின் இணைப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.முக்கிய அம்சமாக தமிழகத்துக்குள் எந்தப் பகுதிக்கும் விவசாய மின் இணைப்பை இடமாற்றம் செய்யவும், இடமாற்றத்திற்கான காரணத்தை தெரிவிக்க தேவையில்லை எனவும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நிலம் விற்கப்பட்டு கிணறு மட்டும் இருந்தால், அதிலும் மின் இணைப்பு இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான செலவுகளை விண்ணப்பதாரர் டெபாசிட் முறையீன் கீழ் ஏற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல முறைமாற்ற திறப்பானுக்கான அனுமதி 15 நாட்களுக்குள் வழங்கப்படும் எனவும் அவ்வாறு அனுமதி கிடைக்காத பட்சத்தில், அவசர காரணங்களுக்காக முறைமாற்ற திறப்பானை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.