25-ஆம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பு…
தென்னிந்திய பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடர்வதாகவும், வடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், பருவமழை காலங்களில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இதனிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் 2-வது முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை அணைக்கு வினாடிக்கு 26,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 99.11 அடியை தாண்டியுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.