2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான ஒப்பந்த நீட்டிப்பு வழங்குக – சீமான் வலியுறுத்தல்…
அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஒப்பந்தம் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்குக் கடந்த ஆறுமாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை எனும் செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரத் தேக்கநிலையில் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தைத் தராது பிடித்தம் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குவது ஏற்கவே முடியாத கொடுங்கோன்மைச் செயலாகும்.
தமிழகத்திலுள்ள 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை நேர வகுப்புகள் மற்றும் மாலை நேர வகுப்புகள் என இரண்டு சுழற்சி முறையிலும் ஏறத்தாழ 4,000 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதம் இவர்களுக்கான பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மாதாமாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மானியக்குழு ரூ 50,000 அளவுக்குக் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த கடந்த பத்தாண்டுகளில் மூன்றுமுறை பரிந்துரை செய்தும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையிலும் பலமுறை ஊதிய உயர்வுக்கு கோரிக்கை வைக்கப்பட்டும் இதுவரை அவற்றை நடைமுறைப்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
மிகக்குறைவாக வழங்கப்பட்டு வந்த ரூ.15,000 ஊதியமும் கொரோனோ நோய்த்தொற்று நிலவும் இந்த அசாதாராணக் காலகட்டத்தில் கல்லூரிகள் திறக்கப்படாததால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படாததால் இப்பேரிடர் காலத்தில் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் குடும்பத்துடன் வறுமையில் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வேறு வாழ்வாதாரம் ஏதும் இல்லாத காரணத்தினால் பொருளாதாரத் தட்டுப்பாட்டால் கடும் மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரைக்குமான 6 மாத காலத்திற்கு மட்டுமே இந்த 2020-21 கல்வியாண்டில் பணி ஒப்பந்தம் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது கௌரவ விரிவுரையாளர்களுக்கு மேலும் மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்புகள் நடைபெறாதபோதும் கல்லூரிகளில் வழமையான மற்ற அனைத்துப் பணிகளையும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றனர். எனவே, சிந்தனை உளி கொண்டு செதுக்கி அறிவார்ந்த திறன்மிக்கத் தலைமுறையை உருவாக்கித் தேசத்தின் வருங்காலத்தைத் தீர்மானிப்பவர்களாகத் திகழக்கூடிய அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஆறுமாத காலமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்த உரிய ஊதியத்தை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இத்தோடு, 2020-21ஆம் கல்விஆண்டுக்கான ஒப்பந்தத்தை உடனடியாக நீட்டித்து, விரைவாக சிறப்பு தேர்வு நடத்தி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை கோருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.