சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணிபுரிய 2013 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படாமல் இருந்த 96 பேரில் பணி நியமன ஆணையை அந்நிறுவனம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கியுள்ளது. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரயில் ஓட்டுனர், நிலைய கட்டுப்பாட்டாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்காக மெட்ரோ ரயில் தேர்வாணையம் மூலம் ஆணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று 346 நபர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் 250 ஊழியர்களை மட்டுமே நிர்வாகம் பணியில் சேர்த்தது. மீதமுள்ள 96 நபர்களுக்கு ஓரிரு மாதத்தில் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் நிர்வாகத்தை அணுகியபொழுது, தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அழைப்பு வரும் என்று கூறி கால தாமதம் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த 96 பேரில் 36 பேர் நீதிமன்றத்தை நாடியதில் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது முதல் கட்டமாக 25 பணியாளர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.