2-வது முக்கிய வீரர் விலகல்… சி.எஸ்.கே அணியில் நடப்பது என்ன?
சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து சி.எஸ்.கே அணியிலிருந்து மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை சுமார் 51 நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்காக கடந்த 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சிஎஸ்கே அணி தனிமைப்படுத்தலுக்கு பிறகு இன்று முதல் பயிற்சியை தொடங்குகிறது. இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் திடீரென அறிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஹர்பஜன் சிங் புறப்படாத நிலையில் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா நடப்பு தொடரில் இருந்து விலகினார். அணி தரப்பிலிருந்து தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அணி நிர்வாக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
தற்போது ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக கூறியுள்ளார். இது, அணியில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கால ஐபிஎல் விதிமுறைப்படி ஒரு முறை வீரர் ஒருவர் தான் விளையாடவில்லை என அணி நிர்வாகத்திடம் கூறிவிட்டால், தொடர் முழுவதும் மீண்டும் அணியில் சேர்க்கப்படமாட்டாது.ஆகையால், நடப்பு ஐபிஎல் தொடரில் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரின் ஆட்டத்தையும் மைதானத்தில் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பமாக இருந்த சிஎஸ்கே அணியில் என்ன ஆனது என்று அதிர்ச்சியில் உள்ளனர். சி.எஸ்.கே ரசிகர்கள்.
கொரோனா தொற்று உறுதியான சிஎஸ்கே அணியின் தீபக் சாஹர், ரித்து ராஜ் ஆகியோர் உயிரி பாதுகாப்பு விதிமுறைப்படி தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, மீண்டும் அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சுரேஷ் ரெய்னா தற்போது பயிற்சியில் தான் இருக்கிறேன், என்னை மீண்டும் சி.எஸ்.கே முகாமில் பார்க்கலாம் என்று கூறியிருந்தார். சுரேஷ் ரெய்னாவின் கருத்து தொடர்பாக பதிலளதித்த சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், ரெய்னா மீண்டும் சி.எஸ்.கே அணியில் இணைவது தொடர்பான முடிவுகளை அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் தான் முடிவெடுப்பார்கள்“ என்று தெரிவித்திருந்தார். இதனால் ரெய்னா மீண்டும் சி.எஸ்.கே-வில் இணைவாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது. ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.