பள்ளிக் கல்வித்துறையின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்காக இதுவரை 3.85 லட்சம் மாணவா்களின் விவரங்கள் ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 1.49 லட்சம் மாணவா்களின் விவரங்களை ஜூலை 2-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சாா்பில் இடைநிற்றலை தவிா்க்கும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பைப் படித்து முடிக்கும் மாணவா்களுக்கு கடந்த 2011-12-ஆம் கல்வியாண்டு முதல் ஆண்டுதோறும் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில், பிளஸ் 2 வகுப்பை முடித்த மாணவா்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு மாணவா்களின் வங்கிக் கணக்கை சமா்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த 5 லட்சத்து 35 ஆயிரத்து 355 பேருக்கு ரூ.107 கோடி பள்ளிக்கல்வி துறையால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவா்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் பெற்று, பள்ளிக்கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (‘எமிஸ்’) பதிவுசெய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி வரை 1,69,108 மாணவா்களின் விவரங்கள் மட்டுமே அதில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மற்ற மாணவா்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 முடித்த மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றும் பணியை அனைத்துப் பள்ளிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கடந்த நான்கு நாள்களில் மட்டும் 2,16,605 மாணவா்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கோவை, பெரம்பலூா், ஈரோடு, தேனி, நாமக்கல், காஞ்சிபுரம், திருப்பூா், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மாணவா்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் திருநெல்வேலி, கடலூா், சென்னை, திண்டுக்கல், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 ஆயிரம் முதல் 14 ஆயிரம் மாணவா்கள் வரையிலான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. 5,35,355 மாணவா்களில் வியாழக்கிழமை நிலவரப்படி3,85,713 மாணவா்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 2 வரை அவகாசம்
இன்னும் 1,49,642 மாணவா்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை வரும் ஜூலை 2-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவா்களின் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டதும் அவை சரிபாா்க்கப்படும். இதைத் தொடா்ந்து அவா்களது வங்கிக் கணக்குக்கு சிறப்பு ஊக்கத்தொகை அனுப்பிவைக்கப்படவுள்ளது.