பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு லாட்டரி மூலம் 1,130 கோடி ரூபாய் கிடைத்தும் அவர்கள் அந்தப் பணத்தை பயன்படுத்தாமல் செகணெண்ட் கார் வாங்கிய விசித்திர சம்பவம் நடைபெற்று உள்ளது. அதுமட்டுமல்லாது அவர்களது மகள்களும் இதேபோன்று செகணெண்ட் கார்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனராம். அதோடு இப்படி கூட விசித்திரம் நடக்குமா எனும் அளவிற்கு அந்த தம்பதிகளின் சில செயல்கள் மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.
பிரான்சிஸ் கொனோல்கி அவரது கணவர் பேட்ரிக் எனும் தம்பதிக்கு பிரிட்டன் தி நேஷனல் லாட்டரி யூரோ மில்லியன் எனும் லாட்டரி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ரூ.1,130 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு பெரும் கோடிஷ்வரர்களாக வாழ வேண்டிய அவர்கள், அப்படி எல்லாம் செய்யாமல் கிடைத்த பணத்தை தங்களது நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் என நினைத்து இருக்கின்றனர். இதனால் நெருங்கிய 50 நண்பர்களக்கு அவர்கள் உதவ முன்வந்து இருக்கின்றனர்.
இப்படி ஆரம்பித்த இவர்களது நன்கொடையால் தற்போது 175 குடும்பங்கள் புதிய வீடுகளை வாங்கி உள்ளனர். மேலும் பல நண்பர்களின் கடன்களும் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது. அதோடு லாட்டரி அடித்த ஒரு வருடம் கழித்து ரூ.600 கோடி ரூபாயை இத்தம்பதியினர் ஏழை குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்களாம்.
பொதுவா பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் எனும் பழமொழியைத்தான் நாம் கேட்டு இருப்போம். நம்முடைய அனுபவங்களும் அப்படித்தான் இருந்து இருக்கின்றன. இந்நிலையில் 1,130 கோடி ரூபாய் இருந்தும் செகணெண்ட் கார், அதுமட்டுமல்லாது அனைத்து நண்பர்களுக்கும் வீடு, அவர்களது கடன் தொகையை திருப்பி செலுத்தியது, 600 கோடி நன்கொடை அளித்தது எனும் அடுக்கடுக்கான செயல்கள் மேலும் ஆச்சர்யத்தை வரவழைக்கின்றன.