புதுவை அரசு ஊழியர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை சேகரித்து வைத்துள்ளார்.
பழமையான பொருட்களை சேகரிக்கும் புதுவை அரசு ஊழியர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை சேகரித்த அய்யனார்.
புதுவை அரசின் சுகாதாரத்துறையில் சுகாதார உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அய்யனார். பழங்கால பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் 1000-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை புதுவை சாமிபிள்ளைதோட்டத்தில் உள்ள தனது வீட்டில் சேகரித்து வைத்துள்ளார். இதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பொருட்களை சேகரித்து வந்துள்ளார்.
இதில் வெண்கலம், பித்தளை, செம்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட செம்பு, டம்ளர், பாத்திரங்கள், பூஜை பொருட்கள், பானைகள், எடைக்கற்கள், மரக்கால் என விதம்விதமாக இடம்பெற்றுள்ளன.
தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பொருட்களை வாங்கியுள்ளார். புதுவை சண்டே மார்க்கெட்டிலும் ஏராளமான பொருட்களை வாங்கி குவித்துள்ளார். இதுதொடர்பாக அய்யனார் கூறியதாவது:-
பழங்கால பொருட்கள் குறித்த விவரங்களை வருங்கால நமது சந்ததியினர் தெரிந்துகொள்வதற்காக இந்த பொருட்களை சேகரித்து வைத்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம்.
இந்த பொருட்களை நமது பெண்கள் புளிபோட்டு துலக்குவார்கள். அது ஒரு உடற்பயிற்சியாகவே அமைந்தது. இந்த பொருட்களில் உணவு சமைத்து உண்பதால் நமக்கு நோய்கள் வராது. ஆனால் இப்போது பிளாஸ்டிக்குகளால் ஆன பாத்திரங்களை பயன்படுத்துவதால் நோய் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
வெண்கல பொருட்களில் சூடான பொருட்களை வைத்தால் அது பல மணிநேரம் அப்படியே இருக்கும். இத்தகைய பொருட்களை பயன்படுத்தியதால் நம் முன்னோர் நூறாண்டுகள் வரை வாழ்ந்தனர். ஆனால் நாம் அதை மறந்ததால் நமது வாழும் காலம் குறைந்து வாழ்க்கை முறையும் மாறிவிட்டது.
நம்மில் பலரது வீடுகளில் மூதாதையர் பயன்படுத்திய பல பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்தாமல் பரணில் போட்டு வைக்காதீர்கள். அதேநேரத்தில் நல்ல விலை கிடைக்கிறது என்று விற்றுவிடவும் கூடாது. முன்னோர்கள் பயன்படுத்திய சாமான்களை நாமும் பயன்படுத்த வேண்டும். இந்த பாத்திரங்களின் பெயர்கள், அவற்றின் பயன்பாடு குறித்து புத்தகம் ஒன்றை தயாரிக்கவேண்டும் என்பது எனது விருப்பம். அதேபோல் அனைவரும் இந்த பாத்திரங்களை பார்த்து ரசிக்க நிரந்தர காட்சியகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
இப்போது ஆயுதபூஜை தினத்தன்று மட்டுமே அனைத்து பொருட்களையும் காட்சிக்கு வைக்கிறேன். மற்ற நேரங்களில் வீட்டில் போதிய வசதியில்லாததால் மூட்டையாக கட்டி வைத்து விடுகிறேன் என்று அய்யனார் கூறுகிறார்.