10 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சியில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள் !!!
செவ்வாய் கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வந்துள்ளது. இது குறித்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி அளித்துள்ளது. இது தொடர்பாக பிசிபி வெளியிட்ட அறிக்கையில், ‘ஃபகர் ஜமான், இம்ரான் கான், காஷிஃப் பாடி, முகமது ஹஃபீஸ், முகமது ஹாஸநெயின், முகமது ரிஸ்வான், வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஹாரீஸ் ராஃப், ஹைதர் அலி மற்றும் ஷதாப் கான் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது’ எனத் தெரிவித்துள்ளது.
மேலும் பிசிபி, ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் நிர்வாக குழுவினரைச் சேர்ந்த 35 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 11 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் 10 வீரர்களும் ஒரு நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவரும் அடங்குவர்,’ எனக் கூறியுள்ளது.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருந்தது பாகிஸ்தான் அணி. அதற்கு முன்னதாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில்தான் இந்த அதிர்ச்சிகர முடிவுகள் வந்துள்ளன.
வரும் ஜூன் 28 ஆம் தேதி இங்கிலாந்துக்குப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த கிரிக்கெட் தொடரானது ‘பயோ-செக்யூர்’ முறையில் நடக்கும்.
இங்கிலாந்தின் மான்சஸ்டரில் உள்ள ஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில்தான் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 5 முதல் 9 ஆம் தேதி வரை நடக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் சவுதாம்டனில் முறையே ஆகஸ்ட் 13 முதல் 17 வரையிலும், ஆகஸ்ட் 21 முதல் 25 வரையிலும் நடக்கும்.
அதேபோல ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் சவுதாம்டனிலேயே டி20 போட்டிகள் நடைபெறும்.
இந்த இக்கட்டான நிலைமை குறித்து பிசிபி சிஇஓ, வாசிம் கான், “இது எங்களுக்குச் சாதகமான நிலைமை இல்லை. மிகவும் ஃபிட்டான 10 விளையாட்டு வீரர்களுக்கு இது நடக்குமானால், யாருக்கு வேண்டுமானாலும் தொற்று வரும் என்பதைத்தான் இந்த சோதனை முடிவுகள் நிரூபிக்கின்றன.
இந்த முடிவுகளை வைத்து பதற்றமாகக் கூடாது. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அது திட்டமிட்டபடி நடத்தவே பார்ப்போம். சோதனை செய்து கொண்ட பல வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. யாருக்கெல்லாம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோ அவர்களெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
வரும் ஜூன் 25 ஆம் தேதி லாகூரில் மீண்டும் வீரர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும். அதில் கொரோனா நெகட்டிவ் என வருபவர்கள் மட்டுமே இங்கிலாந்து தொடரில் பங்கேற்பார்கள். அடுத்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்துக்கு செல்லும் அவர்களுக்கு மீண்டும் கொரோனா சோதனை செய்யப்படும்,” என்று விளக்கமாக கூறியுள்ளார்.