கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஒன்றே இறுதித் தீர்வாக நம்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் மரபணுவில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுவதாகவும் இதனால் தடுப்பூசி கண்டுபிடிப்பில் தாமதம் ஏற்படுமோ என்ற அச்சமும் தெரிவிக்கப் படுகிறது. தற்போது மலேசியாவின் சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் மலேசியாவிற்கு சென்ற ஒரு நபரால் புதிய கொரோனா வைரஸ் பரவிவருவதாகவும் அந்த வைரஸ் தற்போது பரவிவரும் வைரஸைவிட 10 மடங்கு அதிகத் தீவிரம் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
14 நாட்கள் தனிமைப் படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்ட அந்த நபர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஓரிரு நாட்களில் பொதுவெளியில் நடமாடியதால் இதுவரை 45 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றை பரப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் 3 மாகாணங்களில் இந்தப் புதிய கொரோனா நோய்த்தொற்று பரவியிருப்பதால் தற்போது மேலும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புதிய தொற்றுக்கு ஆளாகியிருக்கும் 45 பேரை ஆய்வுசெய்து பார்த்த விஞ்ஞானிகள் மற்ற வைரஸைவிட புதிய வைரஸ் 10 மடங்கு தீவிரம் கொண்டது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் புதிய வைரஸ்க்கு டி614டி என்றும் பெயர் வைத்துள்ளனர்.
புதிய தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் மலேசியாவில் மேலும் நிலைமையை மோசமாக்குமோ என்ற அடிப்படையில் அந்நாட்டு சுகாதார நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் ஐரோப்பா நாடுகளிலும் அமெரிக்காவிலும் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் புதிய மரபணு மாற்றம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பலவீனத்தை ஏற்படுத்துமோ என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். உலகச் சுகாதார நிறுவனம் இதுபற்றி, கொரோனா தடுப்பூசியில் மரபணு மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் திறனை பாதிக்காது என்றும் தெரிவித்து உள்ளது.