10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்ல வீடு தேடி பஸ் வரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஊரடங்கு மே 17க்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துவிட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் எப்படி 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
“10ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் 31ம் தேதி வரை விமானம், ரயில் போக்குவரத்தை ரத்து செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாணவர்கள் எப்படி வந்து தேர்வு எழுதுவார்கள் என்று கேட்டுள்ளனர்.10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்து, திரும்ப வீட்டிற்குக் கொண்டு சென்று விட பஸ் வசதி செய்யப்பட உள்ளது. மலைப் பகுதியில் உள்ள மாணவர்களை அழைத்துவரவும் பஸ் வசதி செய்யப்படும்.தேர்வு எழுதும் மாணவர்கள் மருத்துவத்துறை அறிவுரைப்படி இடைவெளிவிட்டு அமர வைக்கப்படுவார்கள். தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இதனால், நோய்த் தொற்று ஏற்படும் என்று பயப்பட வேண்டாம். சில மாநிலங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 1115 புதிய தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு எழுத முடியும்” என்றார்.