“ஸ்டெர்லைட்” ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு!!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் காற்று, நீர் மற்றும் மண் மாசடைவதாகவும், சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் ஏற்படுவதாகவும், குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் இறுதிநாளில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தபோது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையிட்டது. இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து சுமார் 44 ஆயிரம் டன் தாமிரம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதற்கு முன்பு, நம் நாட்டில் இருந்து 3 லட்சத்து 34 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், இந்தியாவின் தாமிர சந்தையை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதனிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழு, ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல், ஆலையை திறக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதன்படி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, 38 நாட்கள் இருதரப்பு வாதங்களையும் கேட்டது. பின்னர், கடந்த ஜனவரி மாதத்தில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல், வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளனர்.