அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 10 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். வைரஸ் தொடர்பான தகவல்களைஅந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தினமும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார். ஆனால் தனது அரசுக்கு எதிராக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வந்ததால் வெள்ளை மாளிகையில் நடைபெற்று வந்த கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். இதையடுத்து அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டிருந்தது.
அதில் டிரம்ப் காலை மற்றும் மாலை பொழுதுகளை வெள்ளை மாளிகையில் உறங்கியே கழிக்கிறார். அவருக்காக விசேஷமாக தயாரிக்கப்படும் பிரெஞ்ச் பிரைஸ், டயட் கோக் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுக் கொண்டு டிவியை பார்த்து கொண்டு வருகிறார் என செய்தி வெளியிட்டிருந்தது.இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கையில், நான் எப்போதும் வெள்ளை மாளிகையில் நியூயார்க் டைம்ஸில் எழுதப்பட்ட எனது அலுவலக வேலைகள் குறித்த கட்டுரையை நான் படித்தேன். என்னை பற்றி அறியாத ஒரு செய்தியாளரால் அது எழுதப்பட்டுள்ளது.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாமல் உழைக்கிறேன். சில நேரங்களில் உழைக்க நேரமில்லாமல் சாப்பிட வேண்டுமே என்ற கோபத்துடன் ஹம்பர்கரையும் கோக்கையும் எனது படுக்கையில் சாப்பிடுகிறேன். சில நேரங்களில் மதிய உணவு உண்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடுகிறேன்.மக்களுக்கு என்னை பற்றி தெரியும். அதிபர் வரலாற்றிலேயே கடுமையாக உழைக்கும் அதிபர் நான்தான் என மக்கள் கூறுகிறார்கள். அது பற்றி எனக்கு தெரியாது. நான் கடுமையான உழைப்பாளி, அமெரிக்க வரலாற்றில் மற்ற அதிபர்கள் செய்ததைவிட கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறைய செய்துள்ளேன். போலி செய்தி வெளியிடுவோர் எனது உழைப்பை வெறுக்கிறார்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.