வீட்டை காலிசெய்யச் சொன்னதால் 9 பைக்குகளுக்கு தீ வைத்து கொல்லப்பட்ட உரிமையாளர் மகன் – தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமாக 20 வீடுகள் உள்ளன. இதில் உள்ள ஒரு வீட்டில் நடராஜனின் மகன் அண்ணாமலை குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், அங்கு குடியிருந்த மரிய அந்தோணி தினேஷ் என்பவர் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்ததால், 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர்.
இதனால் அண்ணாமலை மீது ஆத்திரத்தில் இருந்த மரிய அந்தோணி, குடித்து விட்டு நடராஜனின் வீட்டு வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தார். தீ மளமளவென அண்ணாமலை வீட்டிற்கும் பரவியது. இந்த விபத்தில், வீட்டில் உறங்கி கொண்டிருந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் நிதின் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பியோடிய மரிய அந்தோணியை போலீசார் தேடி வருகின்றனர். மாடியில் உறங்கியதால் அண்ணாமலையின் மனைவி கங்கா தேவி மற்றும் மற்றொரு மகன் உயிர்தப்பினர்.



