வீட்டில் ஒருபோதும் இப்படி அமர்ந்து வேலை செய்யாதீர்கள்..!
இன்று வீட்டில் அலுவலகப் பணி என்பது பலருக்கும் பழக்கப்பட்ட விஷயமாக மாறிவிட்டது. இருப்பினும் அதனால் சில உடல் நலப் பிரச்னைகளையும் சந்திக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. தூக்கமின்மை, முதுகுவலி, தோள்பட்டை வலி, உடல் பருமன் என பலரும் பாதிப்பட்டுள்ளதாக ஆய்வுகளே வெளிவந்துள்ளன. இந்நிலையில் பலரும் வீட்டில் சௌகரியத்திற்காக கால் மேல் கால் போட்டு அமர்ந்து வேலை செய்வது ஆபத்து என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதாவது கால் மேல் கால் போட்டு அமர்வதால் இரத்த அழுத்தம் அதிகரிக்குமாம். அதாவது நம் கால்களில் உள்ள இரத்தம் புவி ஈர்ப்பு திசைக்கு எதிர் திசை நோக்கி அதாவது மேல் நோக்கி பாய்கிறது. அவ்வாறு செல்லும்போது கால் மேல் கால் போட்டு அமர்வதால் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தடைபடுகிறது. இதனால் இரத்தம் தேங்கி அழுத்தம் உண்டாகிறது. பின் அதன் வேகம் நேரடியாக இதயத்தை பாதிக்கிறது. இதன் அறிகுறி உடனே உங்களுக்குத் தெரியாது.
எனவே அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருத்தலே ஆபத்துதான். அப்படி அமர்ந்தால் உடனே எழுந்து சில நிமிடங்கள் நடப்பது இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கும். இதோடு முதுகு வலி, கழுத்து வலி, மூட்டி வலி போன்ற பிரச்னைகளும் வரும். எனவே சரியான நிலை என்பது இரு கால்களும் தரையில் படும்படி அமர்வதாகும். அதுதான் சரியான அமர்வு நிலை என்கிறது ஆய்வு.