சென்னை: கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மே மாதம் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதம் வழக்கமாக விடப்படும் கோடை விடுமுறையை தள்ளிவைப்பது என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், மே மாதத்தில் வழக்கமான நீதிமன்ற பணிகளை மேற்கொள்வதற்கு பதில், இரண்டு இரு நீதிபதிகள் அமர்வும், 10 தனி நீதிபதிகளும் வழக்குகளை, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மதுரைக் கிளையில் நீதிபதிகள், தங்கள் அறைகளில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கீழமை நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகள், போக்சோ வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் மற்றும் ஜாமீன் – முன் ஜாமீன் மனுக்கள் போன்ற வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது எனவும், நீதிமன்ற பணியாளர்களை ஷிப்ட் முறைப்படி பயன்படுத்த அனுமதிப்பது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.மேலும், கொரோனா பரவல் காரணமாக, கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் வருடாந்திர பணிமாற்றம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது எனவும் நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.